யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து நேற்று அடையாளம் காணப்பட்ட என்புத்தொகுதியின் கழுத்துப் பகுதியிலிருந்து நாணயக்குற்றி வடிவிலான பொருள் ஒன்று கண்டறியப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதனுடன் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித என்புத்தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 263ஆக அதிகரித்துள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 13ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றன.
இதன்போது புதிதாக என்புத்தொகுதியொன்று அடையாளம் காணப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டது. மேலதிகமாக மேலும் மூன்று மனித என்புத்தொகுதிகள் தென்பட்ட போதிலும் அவை இன்னும் சுத்தம் செய்யப்பட்டு இலக்கமிடப்படவில்லை.
அகழ்ந்தெடுக்கப்பட்ட என்புத்தொகுதியின் கழுத்துப் பகுதியிலிருந்து கண்டறியப்பட்ட நாணயக்குற்றி வடிவிலான பொருளானது 97ஆவது சான்றுப் பொருளாக இலக்கமிடப்பட்டு நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த என்புத்தொகுதியின் தலைப்பகுதியில் முழுமையான தேங்காய் சிரட்டை ஒன்றும் அடையாளம் காணப்பட்டது. செம்மணி மனிதப் புதைகுழியானது மயான எல்லைக்குள் அமைந்திருப்பதால் அது ஏதேனும் தென்னங்கன்றுகளின் அடிப்பகுதியாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
இதுவரை செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் ஒன்று மற்றும் இரண்டிலிருந்தும் மொத்தமாக 263 மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் 262 என்புத்தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை ருகுணு பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறையைச் சேர்ந்த பத்து மாணவர்கள் நேற்று முதல் இந்த அகழ்வுப் பணிகளில் இணைந்து கொண்டுள்ளனர்.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் இரண்டாம் பகுதி மூன்று வார கால இடைவெளிக்குப் பின்னர் நேற்று ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது என தெரிவிக்கப்பட்டுள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.